தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் நல்லதம்பி (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி (30) இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்களாகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் ஒரு கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆட்டோவில் சென்ற நிலையில் நேற்று காலை மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த ஆட்டோவை நல்லதம்பி ஓட்டிய நிலையில் ரம்யா பின்னால் அமர்ந்திருந்தார். இந்த ஆட்டோ க. புதுப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நெருங்கிய நிலையில் நல்ல தம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் உத்தமபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரம்யாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அரசு பேருந்தில் வந்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுனர் முருகனை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.