தமிழக தேர்தல் முடிவுகள் மாநிலத்தையே அதிர வைத்துள்ள சூழலில், சிபிஎம் தலைவர் சண்முகம் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சண்முகம், தேர்தல் முடிவுகள் குறித்து எவ்வித கவலையும் இன்றி அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். “எங்கள் கூட்டணியின் மிக முக்கியமான நோக்கம் அதிமுக – பாஜக கூட்டணியை வேரோடு சாய்ப்பதுதான்; அந்த இலக்கை நாங்கள் 100% எட்டிவிட்டோம்” என்று அவர் கெத்தாகத் தெரிவித்தார்.

​27 இடங்களில் போட்டியிட்ட பாஜக, வெறும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழக மக்கள் வகுப்புவாத அரசியலுக்குச் சாவுமணி அடித்துவிட்டதாகப் பெருமிதம் கொண்டார். “தேர்தலில் கட்சிகள் தோற்கலாம், ஆனால் ஜனநாயகம் தோற்கக் கூடாது” என்று அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஆட்சி மாற்றம் ஒரு பக்கம் இருந்தாலும், பாஜக-வை வீழ்த்தியதையே இடதுசாரிகள் தங்களின் மிகப்பெரிய வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர்.