
ராஜஸ்தான் மாநிலத்தின் தவுசா மாவட்டத்தில் அமைந்துள்ள திட்வானா பகுதியின் பஞ்சமுகி ஹனுமான் கோவிலில், பூஜை செய்வதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த கோவிலில் பரசுராம் தாஸ் மகாராஜ் மற்றும் சிவ்பால் தாஸ் ஆகிய இருவரும் பூசாரிகளாக பணியாற்றி வந்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை கோவிலில் ஆரத்தி காட்டுவது குறித்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பரசுராம், சிவ்பாலை அடித்துள்ளார். இதனால்ஆத்திரமடைந்த சிவ்பால் தாஸ், பரசுராமை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் நடந்ததும், கோவிலுக்குள் பரசுராமின் உடல் கிடப்பதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியுடன் கூடி நின்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். கொலை சம்பவத்திற்கு முந்தைய நேரத்தில் கோவிலில் இருந்த சிசிடிவி கேமரா இயங்கவில்லை என்பதை போலீசார் கவனித்தனர். விசாரணையில், சிவ்பால் தாஸ் திட்டமிட்டு கொலை செய்ததுடன், சிசிடிவி பதிவு இல்லாதவாறு முன்னதாகவே அதை அணைத்துவிட்டது தெரியவந்தது.
பின்னர் 18 கிலோமீட்டர் தொலைவில் காயமுற்ற நிலையில் இருந்த சிவ்பால் தாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.