இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58) கடந்த 1998 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வில் நிறுவனமான நாசாவில் இணைந்தார். அதன் பிறகு அவர் விண்வெளிக்கு சென்று பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் முறையாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு சென்றார். இதைத்தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக விண்வெளிக்கு சென்றார்.

இதன் மூலம் மொத்தம் 322 நாட்கள் அவர் விண்வெளியில் தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது 3-வது முறையாக மீண்டும் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவர் இன்று விண்வெளிக்கு செல்ல இருந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென அவருடைய விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.