சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ 1000-ல் இருந்து ரூ 1200 ஆக உயர்த்தியதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு (மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் தவிர) வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தினை ரூபாய் 1000ல் இருந்து ரூபாய் 1200 ஆக ஆகஸ்ட் 2023 முதல் உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை  : மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஓய்வூதியத்தினை ரூபாய் 500ல் இருந்து ரூபாய் 1000 ஆக உயர்த்தி மே, 2011 முதல் நடைமுறைப்படுத்தவும் (ஜூன் 2011 இல் வழங்குவதற்கும்) ஆணை வெளியிடப்பட்டது.

மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனுடையோர் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறனுடையோர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த மாத ஓய்வூதியத்தினை ரூபாய் 1000ல் இருந்து ரூ 1500 ஆக உயர்த்தி வழங்கவும், டிசம்பர் 2022 முதல் நடைமுறைப்படுத்தவும், ஜனவரி 2023 இல் வழங்குவதற்கு ரூபாய் 65,89,72,500 – நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கடிதம் மற்றும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறிப்பிற்கிணங்க, கீழ்கண்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் காத்திருப்பு பட்டியலில் உள்ள 68,607 நபர்கள் (உழவர் பாதுகாப்பு திட்டம் நீங்களாக) மற்றும் ஏற்கனவே பயன்பெற்று வரும் பயனாளிகளின் மாத ஓய்வூதியத்தை (மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம் தவிர) ரூபாய் 1,000ல் இருந்து 1,200 -ஆக ஆகஸ்ட், 2023 முதல் உயர்த்தி வழங்கி அரசு ஆணையிடுகிறது.

திட்டங்களின் பெயர்கள் :

இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், இந்திராகாந்தி விதவையர் ஓய்வூதிய தேசிய திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற/ கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், இலங்கை அகதிகளுக்கான (முதியோர், ஆதரவற்ற விதவைகள், ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்) ஓய்வூதிய திட்டம்.

மேற்காணும் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள கூடுதல் தலைமைச் செயலாளர் /வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கூடுதல் நிதியொதுக்கம் தேவை இருப்பின் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடு/ இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் வழங்குவதற்கு தனியாக கருத்துருவை உரிய நேரத்தில் நிதி (வருவாய்) துறைக்கு அனுப்புமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.