
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் ஷர்துல் தாகூர். இவர் மீண்டும் அணியில் இடம் கிடைப்பதற்காக போராடி வருகிறார். அதற்காக நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிப் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி மும்பை அணி மீண்டும் ஒருமுறை அரையிறுதிக்கு செல்வதற்கு உதவியுள்ளார். அவருடைய இந்த செயல்பாட்டின் மூலமாக தேர்வு குழுவினரை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். இந்த நிலையில் இதுகுறித்து பேசிய அவர்,” எப்போதும் எனக்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. நிச்சயம் நான் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன்.
தற்போது இந்திய அணி ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் பேட்டிங் தெரிந்த ஒரு பந்து வீச்சாளராக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கில் பெரிய அளவில் பங்களிப்பை கொடுத்தார். அதேபோன்று என்னாலும் கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்.
நிச்சயம் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் பட்சத்தில் பேட்டிங்கிலும் என்னால் கைகொடுக்க முடியும். அதேபோல புதிய பந்து, பழைய பந்து என்ற எந்த பந்திலும் பந்து வீச தயாராக இருக்கிறேன். எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்கான அணியில் இடம் பிடிப்பதற்கு தான் தற்போது முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார்.