
சென்னையில் நேற்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்க குழு தலைமை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இதில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் கட்சியின் விதிகளை தேவைக்கேற்ப மாற்றலாம் என்று எழுதி வைத்திருந்தாலும் ஒரே ஒரு விதியை மட்டும் எந்த காரணத்தை கொண்டும் மாற்றக்கூடாது என்பதை தெளிவாக தெரிவித்து இருந்தார். அதாவது கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் ஒன்று சேர்ந்துதான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். இந்த விதியை மட்டும் ஒரு போதும் அதிமுகவில் மாற்றக்கூடாது என்று எம்ஜிஆர் தெளிவாக கூறினார். ஆனால் எம்ஜிஆர் வகுத்த இந்த விதியை மாற்றி தான் அதிமுக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றி பொதுச் செயலாளரை தேர்வு செய்தார்கள். தொண்டர்களின் மனநிலையை கொஞ்சம் கூட நினைக்காமல் அதிமுகவில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தியதால் தான் கடந்த தேர்தல்களில் தோல்வி கிடைத்தது.
தற்போது இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல்ஆணையம் விசாரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது நம்முடைய தரப்புக்கு கிடைத்த முதல் வெற்றி. இதன் மூலம் அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் தலைமை பொறுப்புக்கு வரலாம் என்ற புதிய வரலாறு படைக்கப்பட போகிறது. அந்த நிலை உறுதியாக வரும் நிலையில் அதற்காகத்தான் நாம் தர்மயுத்தத்தை நடத்தி வருகிறோம். நிச்சயம் நல்ல காலம் பிறக்கும் காலம் கனிந்து வருகிறது. அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவி இருக்காது ஒரு அடிமட்ட தொண்டன் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புக்கு வருவார். இதில் சில ரகசியங்கள் இருக்கும் நிலையில் அதனை இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. மேலும் தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர நாம் உறுதியாக போராட வேண்டும் என்று கூறினார்.