
கர்நாடகாவின் பெங்களூருவில் 36 வயதான வினய் சோமையா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். சமூக ஊடகங்களில் தொடர்ந்து அவமதிப்பு மற்றும் விமர்சனங்கள் எதிரொலித்ததை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி, அவர் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
“கொடகு பிரச்சனைகள்” என்ற வாட்ஸ்அப் குழுவின் நிர்வாகியாக இருந்த வினய், ஜனவரியில் காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வரின் சட்ட ஆலோசகர் ஏ.எஸ். பொன்னண்ணா பற்றிய சர்ச்சைக்குரிய பதிவொன்று பகிரப்பட்டதையடுத்து வழக்கில் குற்றவாளியாக பதிவுசெய்யப்பட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், புகைப்படத்தை பகிர்ந்த நபரும், குழு நிர்வாகிகளான வினய் உட்பட இருவரும் கைது செய்யப்பட்டனர். சில தினங்களுக்கு முன் அவர்களுக்கு முன்அறிவிப்பு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால் ஜாமீனில் வந்த பிறகும், வினய்யின் புகைப்படங்கள் பல சமூக ஊடகக் குழுக்களில் பரப்பப்பட்டதோடு, அவதூறான கருத்துகளும் பிரசாரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் அவரது மனநிலையை மேலும் பாதித்து, நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் இருந்து விலகியதற்குக் காரணமாக அமைந்தது.
மரணதினம் காலை, வாட்ஸ்அப் குழுவில் வினய் இறுதியாக ஒரு செய்தியை பகிர்ந்தார். அதில், கொடகுவில் அமைதி நிலவவேண்டும், தவறான வழக்குகள் பதிவு செய்யப்படக் கூடாது என தெரிவித்ததோடு, பொது அவமதிப்பு மற்றும் சமூக ஊடகத் தாக்குதல்களை கடுமையாக விமர்சித்தார். அதன் பிறகு வினய் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக் குறிப்பு ஒன்றில், தன்னை அவமானப்படுத்தியவர்களின் பெயர்களை பதிவு செய்ததோடு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறான நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். இச்சம்பவம் சமூக ஊடகங்களில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் சைபர் துன்புறுத்தல்களின் மீது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.