தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தின் பிரிமியர் ஷோ நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். அவருடைய மகன் ஸ்ரீதேஜ் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூளை சாவு அடைந்தார். நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி தான் காரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியது.

அதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அல்லு அர்ஜுன் தெலுங்கானா முதல்வரின் பெயரை மறந்து வெறும் CM என்று மட்டும் குறிப்பிட்டார். இதன் காரணமாக அவரை பழிவாங்க ரேவந்த் ரெட்டி இப்படி செய்வதாக தெலுங்கானா எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது. ஆனால் இதனை அவர் மறுத்த நிலையில் காவல்துறையினர் மட்டும்தான் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்ததாக கூறினார். இந்நிலையில் தற்போது சட்டசபையில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, புஷ்பா 2 படத்தை பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் மற்றும் சில பிரபலங்கள் தியேட்டருக்கு வருவதாக கடந்த 4-ம் தேதி டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்த நிலையில் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி போலீசார் மனுவை நிராகரித்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்த நிலையில் ஏசிபி அவரை அங்கிருந்து கிளம்புமாறு கூறியபோதும் அவர் படம் முடிந்த பிறகு தான் கிளம்புவேன் என்று கூறிவிட்டார். இருப்பினும் ஏசிபியின் வற்புறுத்தலால் அங்கிருந்து கிளம்பியா அல்லு அர்ஜுன் ரோடு ஷோ நடத்தியுள்ளார். அவர் எப்படிப்பட்டவர் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. எனக்கு புரியவுமில்லை. முதல்வர் நாற்காலியில் என்னால் அமைதியாக அமர முடியவில்லை.

அவர் சிறையில் இருந்து வெளியே வந்த போது அவருடைய வீட்டிற்க்கே சென்ற பிரபலங்கள் ஆறுதல் கூறுகிறார்கள். ஆனால் கூட்ட நெரிசலில் தாயை இழந்து மருத்துவமனையில் ஹோமாவில் இருக்கும் அந்த சிறுவனை சென்று சந்திக்க ஒருவருக்கு கூட மனம் வரவில்லை. திரையுலகில் இருப்பவர்கள் மனிதாபிமானமற்றவர்களாக இருக்கக்கூடாது. பாதிப்படைந்த சிறுவனின் குடும்பம் பல தியாகங்களை செய்துள்ள நிலையில் அவர்களுக்காக துணை நிற்காமல் அந்த நடிகரை சுற்றி பிரபலங்கள் இருக்கிறார்கள்.

அல்லு அர்ஜுன் தன்னுடைய காலை இழந்தாரா? அல்லது கண் பார்வையை இழந்தாரா அல்லது கிட்னியை இழந்தாரா. இது தெலுங்கு திரைப்பட துறையின் முன்னுரிமைகளை பிரதிபலிக்கிறதா.‌ இது போன்றவர்களுக்கு அரசு துணை நிற்காது. கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்து இழப்புகள் ஏற்பட காரணமானவருக்கு சலுகைகளை வழங்க முடியாது. இனி நான் முதல்வராக இருக்கும் வரை தெலுங்கானாவில் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது. மேலும் ஒரு ரசிகை உயிரிழந்ததற்கு அல்லு அர்ஜுன் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.