தமிழகத்தில் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பணக்கொடை போன்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் சிறப்புத்துறை தேர்வுகளை எழுதுவதில் இருந்து விலக்கு பெறும் வயது 53 இல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அரசு ஊழியர்கள் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பணக்கொடை பெறுதல் போன்ற காரணங்களுக்காக சிறப்பு மற்றும் துணை தேர்வுகளை எழுத வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் 53 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும். தொடர்புடைய அரசு அலுவலர் ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற குறைந்தது ஐந்து முறையாவது முயற்சி செய்திருக்க வேண்டும்.

இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறப்பு மற்றும் துறை தேர்வுகளை எழுதுவதில் இருந்து விலக்கு பெறுவதற்கான வயது வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இதற்கான அதிகபட்ச வயது வரம்பு 53 என்பது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தபோது நிர்ணயிக்கப்பட்டது. தற்போது ஓய்வு பெறுவதற்கான வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அரசு ஊழியர்கள் துறை மற்றும் சிறப்பு தேர்வுகள் எழுதுவதில் அதிகபட்ச வயது வரம்பு 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.