அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து இதயத்திலிருந்த ரத்த நாள அடைப்பை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் தனிப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே அவரிடம் இருந்த மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சு.முத்துசாமிக்கும் வழங்கப்பட்டது.

அதன்பின் அவர் இலாகா இல்லா அமைச்சராக அமைச்சரவையில் நீடித்து வருகிறார். அவர் அமைச்சராக தொடர தமிழக அரசு நிர்வாக ரீதியிலான அரசாணையை வெளியிட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகபற்றி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திகுறிப்பில் “பணி வழங்குவதற்கு பணம் கேட்டது மற்றும் பண மோசடி உட்பட பல்வேறு ஊழல் வழக்குகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையான குற்றத்தை எதிர்கொண்டுள்ளார்.

ஆகவே அமைச்சரவையில் அவர் நீடிப்பது, நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாக பாதிக்கும். இது கடைசியில் மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் எனும் நியாயமான அச்சங்கள் இருக்கிறது. இதனால் ஆளுநர் ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.