தேனி பாலார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணி-இந்திரா ராணி தம்பதியினர். இவர்களுக்கு ராம் குமார், ரகுகாந்தி, ராகவன் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகனான ரகுகாந்தி படிப்பை முடித்து விட்டு தனியார் மினி பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கூழையனூர் கிராமத்தை சேர்ந்த ஜனனி என்ற பெண்ணை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களில் ஜனனி உத்தமபாளையத்திலுள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் திடீரென காணாமல் போன ரகுகாந்தி தன் முகநூல் பக்கத்தில் திருமண கோலத்தில் ஜனனியுடன் புது புகைப்படங்களை வெளியிட்டார்.

முகநூலில் புகைப்படத்தை பார்த்த ஜனனியின் பெற்றோர்கள் தன் உறவினர்களுடன் ரகு காந்தி வீட்டிற்கு சென்று மின்விசிறி, தொலைக்காட்சி, கட்டில், ஜன்னல் கண்ணாடி, பிரிட்ஜ் மற்றும் சமையல் எரிவாயு அடுப்பு உட்பட அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி பீரோவில் வைத்திருந்த 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின்படி தலைமறைவாக இருக்கும் ஜனனி மற்றும் ரகு காந்தி ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் ரகு காந்தியின் வீட்டிலுள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக ராஜா, கீதா மற்றும் அவர்களது உறவினர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.