அமெரிக்க நிறுவனங்களில் இந்திய ஊழியர்களுக்கு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை அம்பலப்படுத்தும் ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபில் பட் என்ற இந்தியர், தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, அமெரிக்க சக ஊழியர்கள் இந்திய குழுவை தங்கள் “பணி குப்பைத் தொட்டி”யாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் பயின்று, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஜெனென்டெக் நிறுவனத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் டேட்டா சயின்ஸ் துறையில் பணியாற்றிய இவர், தற்போது இந்தியாவில் தனது தொழில் வாழ்க்கையில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரது பதிவில், “புரியாத வேலைகள், அவசர வேலைகள், பாராட்டு இல்லாத வேலைகள் எல்லாம் இந்திய குழுவுக்கு தள்ளப்படுகிறது. அமெரிக்க ஊழியர்கள் வேலையை இந்திய குழுவுக்கு அனுப்பிவிட்டு, பயனற்ற கூட்டங்களில் பங்கேற்று, ரிலாக்ஸ் செய்து, பின்னர் வேலையை முடித்துவிடுகின்றனர்,” என குறிப்பிட்டுள்ளார்.

கபில் பட்டின் இந்த பதிவு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று, இந்திய வேலை கலாசாரம் குறித்து பரவலான விவாதத்தை தூண்டியுள்ளது. எக்ஸ் தளத்தில் பலரும் இதற்கு தங்கள் கருத்துகளை பகிர்ந்து, இந்திய ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒரு பயனர், “என் குடியிருப்பில் உள்ள ஐடி ஊழியர்கள் இதே பிரச்சனையை சொல்கிறார்கள். அமெரிக்காவில் ஆன்சைட் வேலை செய்யும் இந்தியர்களும் கூட வேலைகளை இந்திய குழுவுக்கு தள்ளிவிடுகின்றனர்,” என்று கூறியுள்ளார். மற்றொருவர், “இந்தியர்கள் புகார் செய்யாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

அமெரிக்க ஊழியர்கள் அதிக சம்பளம் வாங்கினால், அதற்கு தகுந்த பொறுப்பையும் ஏற்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொரு கருத்தில், “இந்திய ஊழியர்கள் தொழில்முறையில் ‘இல்லை’ என்று சொல்வதை கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மற்றவர்கள் எப்போதும் வேலையை திணிப்பார்கள்,” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதிவு, இந்தியர்கள் எதிர்கொள்ளும் பணிச்சுமை மற்றும் பாகுபாடு குறித்த உரையாடலை முன்னெடுத்துள்ளது