இந்திய கேப்டனின் ஆட்டோகிராப் கிடைக்காததால் ரசிகர் கதறி அழுத உணர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது..

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.. இங்கு பாலிவுட் நட்சத்திரங்களை விட கிரிக்கெட் வீரர்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். சில நேரங்களில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களைப் பற்றி பேசும்போது மிகவும்  உணர்ச்சிவசப்படுவார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் தான் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இதில் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் ஆட்டோகிராப் கிடைக்காததால் ரசிகை ஒருவர் அழத் தொடங்கினார்.

இந்திய மகளிர் அணி தற்போது உள் நாட்டில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணம் டிசம்பர் 6 அன்று நடைபெற்ற டி20 போட்டியுடன் தொடங்கியது, இதில் இந்திய அணி  38 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. போட்டியின் போது, ​​இந்திய அணிக்கு ஆதரவாக ஏராளமான ரசிகர்கள் மும்பை வான்கடே மைதானத்திற்கு வந்திருந்தனர். போட்டி முடிந்ததும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோவில், ஒரு பெண் சில இளம் ரசிகர்களிடம் தங்களுக்கு பிடித்த வீராங்கனை பற்றி கேட்கிறார்.

ஹர்மன்ப்ரீத் கவுரை தங்களின் விருப்பமான வீராங்கனை என்று இரண்டு பெண்கள்கூறினர். அப்போது, ​​ஹர்மன்  ப்ரீத்துக்காக ஒரு அட்டைப் பலகையையும் தயாரித்ததாகவும், ஆனால் அதில் தன்னால் ஆட்டோகிராப் பெற முடியவில்லை என்றும் கூறினார். இந்த உரையாடலின் போது, ​​திடீரென சிறுமிகளில் ஒருவர் ஹர்மன்ப்ரீத் கவுர் பெயரை சொல்லி கடுமையாக அழத் தொடங்குகிறார். இதைத்தொடர்ந்து அந்த பெண் மற்றும் சக தோழிகள் அனைவரும் அந்த சிறுமிக்கு ஆறுதல் கூறினர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த சம்பவத்தின் வீடியோவை பார்த்து நெகிழ்ந்து போன இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கொண்டு,. முழுமையான அன்பு மற்றும் அப்பாவித்தனத்தின் ஒரு தருணம். ஆசீர்வாதம் மற்றும் அன்பு” என குறிப்பிட்டு தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

இந்த தொடரின் 2வது போட்டி டிசம்பர் 9ஆம் தேதி (இன்று) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடரில் நிலைத்திருக்க, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இந்த போட்டியில் எப்படியும் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில், 2வது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற இங்கிலாந்து முயற்சிக்கும்..