பிரதமர் மோடி மீதான ‘பனௌட்டி’ கிண்டலுக்கு கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.

ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, வீரர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி டிரஸ்ஸிங் அறைக்குச் சென்றார். இந்தியா தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், அங்கு ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இறுதிப்போட்டியில் விராட் கோலி (54), லோகேஷ் ராகுல் (66), ரோகித் சர்மா (47) ஆகியோரின் ஆட்டத்தால் இந்திய அணி 240 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா 47 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது, ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே ஆகியோர் 192 ரன் பார்ட்னர்ஷிப்பை அமைத்து போட்டியை வென்றனர். ஹெட் 120 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் லாபுஷாக்னே 110 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.

இந்தியாவின் தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ‘பனௌட்டி’ என்ற வார்த்தையை பயன்படுத்தி பிரதமர் மோடியை விமர்சித்தார்.  அதாவது ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “நம்முடைய ஆட்கள் நன்றாக விளையாடினார்கள், உலகக் கோப்பையை வென்றிருப்பார்கள். ஆனால் ‘ பனௌடி ‘ எங்களை இழக்கச் செய்தது என்றார். இதையடுத்து பிரதமர் மோடியை குறிவைத்து சமூக வலைதளங்களில் ‘பனௌட்டி’ (கெட்ட சகுனம்) ட்ரெண்ட் தொடங்கியது. பல எதிர்க்கட்சி தலைவர்களும் இதில் அரசியல் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் பாஜக எம்பியுமான கெளதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் கௌதம் கம்பீரின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது, அதில் அவர் பிரதமரைப் பற்றிய வார்த்தையைப் பயன்படுத்துபவர்களை விளாசினார், பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் கருத்து தேவையற்றது என்று பாஜக எம்பி கவுதம் கம்பீர் கருதினார். கௌதம் கம்பீர் 2011 உலகக் கோப்பை அரையிறுதியைப் பற்றியும் பேசினார், அங்கு மொஹாலியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்வதைக் காண அப்போதைய நாட்டின் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பனாட்டி (Panauti) என்ற வார்த்தை பயன்படுத்தியது மிகவும் தவறானது என்றார். கம்பீர் ANI க்கு அளித்த பேட்டியில்,”பனௌடி’ என்ற வார்த்தை, யாருக்கும் எதிராக, குறிப்பாக இந்த நாட்டின் பிரதமருக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடிய மிக மோசமான வார்த்தையாக இருக்கலாம். 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதியில், டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். . அந்த போட்டியில் நாங்கள் தோற்று, அவர் எங்களை சந்திக்க வந்திருந்தால், அதில் என்ன தவறு இருந்திருக்கும்?,” என்று  கூறினார். ராகுல்காந்தியின் கருத்துக்கு மறைமுகமாக கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.