பட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனரான டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையேயான உள்கட்சி மோதல் தற்போது கடும் நிலையில் உள்ளது.
அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான விளக்கம் அளிக்காததையடுத்து, அவருக்கு எதிராக வியாழக்கிழமை நடவடிக்கை எடுக்கப்படலாம் என பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பரபரப்பான சூழலில், விழுப்புரம் தைலாபுரத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகிகளுடன் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி.கே.மணி, பு.தா.அருள்மொழி, ஸ்ரீகாந்தி, அன்பழகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அன்புமணிக்கு எதிரான நடவடிக்கை, ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரை, மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், அன்புமணி தொடர்ந்து கட்சி தீர்மானங்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் தெளிவாக முன்வைக்கப்பட்டன. கூட்டம் முடிந்து வெளியே வந்த புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி, “2026 சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் வகையில் டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுக் கூறினார்” என தெரிவித்தார்.
மேலும் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு விஷயம் பா.ம.க. உறுப்பினர் அடையாள அட்டைகள் மற்றும் உறுப்பினர் படிவங்களில் அன்புமணியின் புகைப்படம் மற்றும் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்பது முக்கிய கவனத்துக்குரியது. இதுவரை ராமதாஸ் – அன்புமணி இருவரின் புகைப்படங்களுடன் அச்சிடப்பட்டிருந்த அட்டைகள், தற்போது ராமதாஸ் படம் மட்டும் உள்ளதைக் காணக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, அன்புமணிக்கு எதிராக கட்சி அளவிலான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற அரசியல் முன்னேற்பாட்டை உருவாக்கியுள்ளது. அவரது பதவிக்கு முடிவா என்பது வட்டாரங்களில் பெரும் கேள்விக்குறியாக காணப்படுகிறது.
