இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நாட்களில் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்குரிமை உள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையானது தின கூலி மற்றும் சாதாரண ஊழியர்களுக்கும் வழங்கப்படும். தேர்தலின் போது விடுமுறை அளிக்க மறுக்கும் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. அதே சமயம் அவர்களுக்கு ஆர்பி சட்டத்தின்படி 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இருந்தாலும் பணியாளர்கள் இல்லாதது ஆபத்தை ஏற்படுத்தும் அல்லது முதலாளிகளுக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தக்கூடிய வேலையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விடுமுறை விலக்கு அளிக்க நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.