மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் பழைய தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அவரது கைப்பகுதி துண்டானதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த இளைஞர், ஊராட்சித் தலைவர் உள்பட 6 பேர் மீது குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமோ மாவட்டம் படியாகர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிகிறது. ஆலம்பூர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான குமான் சிங் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த 6 பேர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரை அருகிலிருந்த காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, கோடாரியால் கையில் தாக்கியதில் கைப்பகுதி துண்டானதாக குமான் சிங் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து படுகாயமடைந்த குமான் சிங்கை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் ஊராட்சித் தலைவர் அஜுத்தி ஆதிவாசி உள்ளிட்ட 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக குமான் சிங் குற்றம்சாட்டியுள்ளார். அவர்களில் இருவரை மட்டுமே தமக்குத் தெரியும் என்றும், மற்றவர்களை அடையாளம் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் ஏற்கெனவே இருந்த வாகனத் தகராறு காரணமாக ஏற்பட்ட விரோதம் இருப்பதாக குமான் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்தவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.