
சாலையோரம் நிற்கும் லாரிகளை குறிவைத்து டீசல் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவர் சொந்தமாக லாரி வைத்து டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான லாரி நேற்று அதிகாலை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி செல்லும் பாதையில் நின்று கொண்டிருந்தது.
அப்போது சந்தேகப்படும்படியாக மற்றொரு லாரி பாரதிராஜாவின் லாரிக்கு பின்னால் வந்து நின்றது. இதனை தனது மொபைலில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் பார்த்த பாரதிராஜா அந்த லாரியின் மீது சந்தேகம் கொண்டு தனது நண்பர்களுடன் அந்த லாரியை காரில் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
சுமார் 50 கிலோமீட்டர் தூரம் பின்தொடர்ந்து சென்று வேலூர் அடுத்த வெள்ளாம்பள்ளி என்ற பகுதியில் அந்த லாரியை மடக்கி பிடித்தார். இவரை பார்த்ததும் லாரியில் இருந்த இரண்டு பேர் தப்பி ஓடிய நிலையில் வடமாநில வாலிபர் மட்டும் பிடிபட்டுள்ளார்.
தொடர்ந்து லாரியில் ஏறி பார்த்த போது அதில் கேன்களில் டீசல் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வட மாநில வாலிபரை கைது செய்து லாரி, டீசல் கேன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் வாகனங்களை குறி வைத்து தொடர்ந்து டீசல் திருடியது தெரியவந்தது.