பெங்களூரில் செயல்பட்டு வரும் போயிங் விமான நிறுவனம் ஒரே நேரத்தில் 180 என்ஜினியர்களை பணி நீக்கம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் பலர் கோபம் மற்றும் கவலையில் உள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், பல ஆண்டுகளாக நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த தொழில்நுட்ப வல்லுநர்களாவும் இருக்கின்றனர்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட போயிங் நிறுவனம், உலகளவில் விமான உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில், குறிப்பாக பெங்களூரில் அதன் முக்கிய உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் மட்டும் ஆண்டு வருமானம் ரூ.8,000 கோடியை ஈட்டுகிறது. எனினும், சர்வதேச அளவில் எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிகள் காரணமாக, நிறுவனம் பெரும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பெங்களூர் மையத்தில் 180 என்ஜினியர்கள் ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட மற்ற கிளைகளிலும் பணிபுரியும் ஊழியர்கள் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. எப்போது என்ன நடக்கும் என்பதற்கான அனுமானம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. தற்போது இந்த நீக்க நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளர்கள் மனமுடைந்து உரிமைகளை நிலைநாட்டும் போராட்டங்களை நடத்த வாய்ப்புள்ளதாகத் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.