நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய அரசின் வோர்லி போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸப் எண்ணுக்கு, சல்மான்கானை அவரது இல்லத்தில் வைத்து கொலை செய்துவிட்டு அவரது வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த போவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளது.

இதுகுறித்து வோர்லி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 1998-ஆம் ஆண்டு சல்மான்கான் ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அப்போது அரிய வகை பிளாக் பக் மான்களை அவர் வேட்டையாடியதாக தெரிகிறது.

இது தொடர்பான வழக்கில் சல்மான் கான் நீதிமன்றத்தை நாடி ஜாமின் பெற்றார். பிஷ்னோய் மக்களின் குருவான 16-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறு வடிவமாக அந்த அரியவகை மான்கள் கருதப்பட்டு வருகிறது.

இதனால் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து சல்மான் கானுக்கு மிரட்டல் விடுகின்றனர். பலமுறை அவர்கள் வெளிப்படையாக கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் மத்திய அரசு தரப்பில் சல்மான்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.