அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாத நிலையில் அது பற்றி அவரிடம் கேட்டபோது ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார். அதன்பிறகு எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்ட விழா சமீபத்தில் நடைபெற்ற போது ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆட்சியை  புகழ்ந்து பேசிய செங்கோட்டையன் ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை சொல்லவில்லை. இதன் காரணமாக தற்போது அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் நிலவுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே செங்கோட்டையன் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைய சில துரோகிகள் தான் காரணம் என்று கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது, கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தோம். அதற்கு சில துரோகிகள் தான் காரணம். அவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும். நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. தொண்டனாக இருந்து நான் என்றென்றும் பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்று கூறினார். மேலும் கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைய சில துரோகிகள் தான் காரணம் என்று அந்த துரோகிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் யாரை சொல்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.