தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதத்தில் விஜய் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் முதல் மாநாட்டினை நடத்தி முடித்ததோடு சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை நடத்தி 26 தீர்மானங்களை நிறைவேற்றினார். நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் எதிரியாக திமுகவை அறிவித்ததோடு அக்கட்சியை விமர்சனம் செய்து வருகிறார். இதேபோன்று பாஜகவை கூட அவர் மறைமுகமாக தாக்கி பேசுகிறார்.

அதே சமயத்தில் அவர் அதிமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்காததோடு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் இது குறித்து அந்த கட்சியினரிடம் கேட்டால் அவர்கள் தேர்தல் சமயத்தில் அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள். இந்நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமியிடம் விஜய் கூட்டணி குறித்து பங்கீடு கேட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது அதிமுகவுக்கு 156 சீட் மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு 80 சீட் கேட்டதாக கூறப்படுகிறது. அப்படிப் பார்த்தால் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும். ஒருவேளை இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்தால் முதல்வராக அவரும் துணை முதல்வராக விஜய்யும் பொறுப்பேற்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிலர் இந்த தகவலில் உண்மை இருக்காது என்று கூறுகிறார்கள்.

ஏனெனில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டின் முதல்வராக விஜயை பதவியில் அமர வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கட்சியினரிடம் வலியுறுத்தி வருகிறார். அப்படி இருக்கும்போது எப்படி முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வராக விஜய்யும் பொறுப்பேற்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி கொண்டிருந்தாலும் 2026 ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் தான் தீர்க்கமான அறிவிப்புகள் என்பது வெளிவரும்.