அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் அவகாசம் வழங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இந்த அறிவிப்பு, கட்சிக்குள் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் செயல்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாகக் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனுடன், செங்கோட்டையனின் ஈரோடு மாவட்ட ஆதரவாளர்களான ஏழு பேரின் பதவிகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். கே.ஏ. சுப்பிரமணியன், ஈஸ்வரமூர்த்தி, குறிஞ்சிநாதன், தேவராஜ், வேலு, ரமேஷ் மற்றும் மோகன்குமார் ஆகியோரின் கட்சிப் பொறுப்புகள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அதிமுக உள்நிலை அரசியலில் புதிய பிளவை உருவாக்கி, வருங்காலத்தில் மேலும் கடும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
