
அதிமுக கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன். இவர் பலமுறை எம்எல்ஏவாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர். சமீபகாலமாக இவருடைய நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் அதிமுக கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது கோவையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாத செங்கோட்டையன் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்களை நிராகரித்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்ததால் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார். அதன் பிறகு எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை மட்டும் செங்கோட்டையன் குறிப்பிடவில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தீர்ப்பு வந்த போது செங்கோட்டையன் தன் ஆதரவாளர்களுடன் வீட்டில் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி 82 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறாத நிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட இருக்கிறார் என்று ஒரு செய்தி தீயாக பரவி வருகிறது. அதோடு கடந்த தேர்தலில் சில துரோகிகளால் தான் அதிமுக தோல்வியடைந்தது என்று அவர் கூறிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இது பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது, நான் அந்நியூர் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் அந்த தொகுதியில் தோல்வி அடைந்தது சில துரோகிகளால் என்று அந்த தொகுதியை மட்டும் தான் குறிப்பிட்டு பேசினேன். அந்த தொகுதியில் சிலர் வெளிப்படையாகவே தேவையில்லாத வேலைகளை பார்த்தார்கள். கட்சி வழக்குகள் தொடர்பான கேள்விகளுக்கு சி.வி சண்முகம் பதில் வழங்குவார். கூட்டணி தொடர்பான கேள்விகளை நீங்கள் பொதுச் செயலாளரிடம் மட்டும் தான் கேட்க வேண்டும். இது தொடர்பான கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பது கிடையாது. அதிமுகவில் மூத்தவர்கள் இளையவர்கள் என்றெல்லாம் கிடையாது. மேலும் எப்போதும் நான் சாதாரண தொண்டன் தான் என்று கூறினார்.