டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில், சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் 3.00 மணிக்குள் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 18 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 8 முதல் 10 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

கட்டிடம் இடிந்து விழும் தருணம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் கட்டிடம் முழுமையாக தரைதட்டும் போது தூசி மேகங்கள் வானத்தை மறைக்கும் அளவுக்கு எழுந்து காணப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), காவல்துறை மற்றும் மோப்ப நாய்கள் குழு இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு மாவட்ட துணை ஆணையர் சந்தீப் லாமா தெரிவித்ததாவது, “நாங்கள் தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். முழுமையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்” என கூறினார்.