தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தமிழகத்தில் டெங்கு பரவலை தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

அதன்படி கொசு ஒழிப்பு பணிகளை விரிவாக மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அதன் உற்பத்தியை தடுக்கலாம். பயன்பாடு இல்லாமல் இருக்கும் டயர், டியூப் மற்றும் தொட்டிகளை அகற்றுவதுடன் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் ஏடிஎஸ் வகை கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.