இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் ஐந்து அம்ச தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்து அம்சம் என்பது பரிசோதனை, தடுப்பூசி மற்றும் தொடர்பை கண்டறிதல் ஆகியவற்றை குறிக்கும். இதனைப் போலவே அனைத்து மாநிலத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுடன் மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகத்தில் உள்ள 342 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களும், விவரங்களை முறையாக ஐ சி எம் ஆர் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.