அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகள் முதலீடு போன்றவற்றில் மோசடி செய்து அரசை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை எட்டியது. அதன் பிறகு நாடாளுமன்ற கூட்டத்திலும் எதிர்க்கட்சிகள் அதானி குழுமம் பற்றி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால் மத்தியில்ஆளும்  பாஜக அரசு அதானி குழுமம் பற்றி விவாதம் நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் அதானி குழுமம் இது விசாரணை நடத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஒப்புதல் தெரிவித்தது. தற்போது அதானி குழுமம் மீது தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் நிபுணர்களின் கருத்துகளுடன் கூடிய பதில் மனுவை மத்திய அரசு சீல் செய்யப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதோடு வழக்கின் விசாரணையில் வெளிப்படை தன்மை தேவை. எனவே அதானி குழுமம் தொடர்பாக சீல் செய்யாத அறிக்கையை சமர்ப்பியுங்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அதானி குழுமம் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு பரிந்துரை செய்த குழுவை நிராகரித்த நீதிமன்றம், நாங்களே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அதானி குழும விவகாரத்தை விசாரிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.