சென்னை கலெக்டரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை ஆய்வு செய்த தணிக்கை குழுவினர், ரூ.11,63,539 மதிப்பிலான மோசடி நடந்திருப்பதை கண்டறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று காசோலைகள் மூலம் அந்த தொகை மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட தகவல் உடனடியாக மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், துணை கலெக்டர் ஹர்ஷத் பேகம், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், இணை கமிஷனர் மனோகரின் உத்தரவின்படி, துணை கமிஷனர் சுந்தரவடிவேலின் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராஜசேகரன் தலைமையில் விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் அருணாச்சலராஜா தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், கலெக்டரின் கையெழுத்தைப் போல தயாரிக்கப்பட்ட காசோலைகள் மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதோடு, போலி ரப்பர் ஸ்டாம்பும் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இந்த மோசடியில் ஈடுபட்டவர் திருவள்ளூர் மாவட்ட பாக்கத்தைச் சேர்ந்த பிரமோத் (30), தரமணியைச் சேர்ந்த சுப்பிரமணி (31) ஆகிய இருவரும் தற்போது வருவாய் ஆய்வாளர்களாக சென்னையில் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களில் பிரமோத் தனது நண்பர் தினேஷின் வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றியதும், தினேஷும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்ததால், தினேஷையும் போலீசார் கைது செய்தனர். தினேஷ் தற்போது ஓர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இந்த மோசடி வழக்கில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம், தங்க மோதிரம் மற்றும் ரூ.85,000 ரொக்கம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கலெக்டரின் கையெழுத்தைப் போலியாக்கி, மோசடியில் ஈடுபட்டிருப்பது அரசுத் துறையின் பாதுகாப்பு முறைகளில் பெரிய சிக்கலைக் காட்டுகிறது. தற்போது, கைது செய்யப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.