கர்நாடக மாநிலம் பெங்களூரில் இந்தி மொழி பேசத் தெரியாத காரணத்தினால் டெலிவரி ஊழியர் ஒருவர் மீது பெண்கள் உள்பட நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு இந்தி மொழி தெரியாது என்றும், எதற்காகத் தங்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுகிறீர்கள் என்று கன்னட மொழியில் கேள்வி எழுப்பியதே அந்த ஊழியர் செய்த குற்றமாகப் பார்க்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சொந்த மாநிலத்தில் கன்னடர்களுக்குப் பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வியை எழுப்பி அவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பாதிக்கப்பட்ட டெலிவரி ஊழியர் தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டுள்ளனர்.

பெண்கள் உட்பட வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மொழி விவகாரத்தை மையமாகக் கொண்டு பெங்களூர் நகரில் மீண்டும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டுப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.