கரூர் மாவட்டத்திலுள்ள ஜெகதாபி என்ற பகுதியில் மனோகரன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவியும், பிரிய லட்சுமி என்ற மகளும், திவாகரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் மனோகரன் குடிப்பழக்கத்தை மறப்பதற்காக சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த சமயத்தில் மனோகரன் வீட்டிற்கு எதிரே அவருடைய தந்தை மாணிக்கம் (70) புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார்.

இதனால் சுதா எங்களுடைய வீட்டிற்கு எதிரே வீடு கட்ட வேண்டாம். என் கணவர் வந்த பிறகு வீடு கட்டும் பணியை ஆரம்பியுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் சுதாவை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இந்நிலையில் சிகிச்சை முடித்துவிட்டு வந்த மனோகரனிடம் நடந்ததை சுதா கூறியுள்ளார். இது தொடர்பாக தன்னுடைய தந்தையிடம் கேட்டு மனோகரன் தகராறு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 22-ம் தேதி தான் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு முன்பே மாணிக்கம் படுத்து தூங்கியுள்ளார். அப்போது இங்கே தூங்க கூடாது என மனோகரன் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் தன்னுடைய மகள் வழி பேரனான மணிராஜ் என்பவரை அங்கு வரவழைத்துள்ளார். அப்போது மனோகரன் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் மனோகரனை கையால் அடித்து துடிக்க துடிக்க கொலை செய்தனர். இதனையடுத்து மாணிக்கம் தன்னுடைய நெருங்கிய உறவினர்களை மட்டும் வரவழைத்து சாலை விபத்தில் தன்மகன் இறந்து விட்டதாக கூறி சுடுகாட்டில் வைத்து அவருடைய உடலை எரித்துவிட்டார். இது தொடர்பாக சுதா வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணிக்கம் மற்றும் மணிராஜ் ஆகியோரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.