
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்பவர் நகை திருட்டு சந்தேக புகாரில் அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.
இந்த வழக்கில் அஜித் குமாரை போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முக்கிய சாட்சி தன் உயிர்க்கு ஆபத்து இருப்பதாக கூறியதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் தமிழ் பிரபலங்கள் அமைதியாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பரவி வருகிறது.
இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் இந்த சம்பவத்திற்கு தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், தம்பி அஜித் குமார் மரணத்தை நினைத்து என் நெஞ்சம் பதறுகிறது ரத்தம் கொதிக்கிறது. தம்பி அஜித் குமாரை போலீசார் அடித்தே கொடுங்கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் புகார் கொடுத்த நிக்கிதாவை இதுவரை கைது செய்து விசாரணை நடத்தியதாக செய்திகள் வரவில்லை.
என்னதான் நடக்கிறது.? ஏழை எளியவர் என்றால் உடனே பாயும் சட்டம் அதிகார வர்க்கத்திற்கு வேண்டியவர்கள் என்றால் பம்முமா. மேலும் மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எல்லாத்துக்கும் எதிர்வினை உண்டு என்று பதிவிட்டுள்ளார்.