
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே மடப்புரம் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் திருட்டு சந்தேக வழக்கில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் புகார் கொடுத்து நிகிதா மீது ஏற்கனவே பண மோசடி புகார் உள்ளிட்டவைகள் இருப்பதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இவர் ஒரு அரசு கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராக இருக்கும் நிலையில் கல்லூரியிலும் புகார்கள் குவிந்துள்ளதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த வழக்கில் நிகிதா பற்றி அடுத்தடுத்து தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது அண்ணாமலையுடன் நிகிதா சேர்ந்து எடுத்துக் கொண்டதாக ஒரு புகைப்படம் வைரல் ஆகிறது. ஆனால் நிகிதா பெயரில் தன்னுடைய புகைப்படத்தை அப்படி வைரல் ஆக்குவதாக கூறி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக செயலாளர் புகார் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும் போது, என்னுடைய பெயர் ராஜினி. நான் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கிறேன். நான் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை நிகிதா என கூறி தவறாக வைரல் ஆக்குகிறார்கள்.
இதனை கொண்டு போனது செந்தில் சரவணன். அவரது ஐடியில் தான் இது போன்ற புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர் மீது புகார் கொடுத்துள்ள நிலையில் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளேன்.
அது என்னுடைய போட்டோ. அண்ணாமலை என்னுடைய அண்ணா. அவரை முன்னிறுத்தி தான் நாங்கள் உள்ளே வந்தோம். ஆனால் இப்படி போட்டோவை வைத்து அசிங்கப்படுத்தி உள்ளனர். இது ஒரு பெண்ணை கலங்கப்படுத்தியது போல் இல்லை. எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் இது பற்றி விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டம் வெடிக்கும் என்று கூறினார்.