திருவள்ளூர் மாவட்டம் திருவெள்ளைவாயல் ரத்தினமணி நகரைச் சேர்ந்த ஹரிஹரன் (40) என்பவர் செங்குன்றம் அருகே நாரவாரிகுப்பம் கலைவாணர் தெருவில் 1,320 சதுரடி வீட்டுமனை வாங்கியுள்ளார். இந்த நிலத்தில் வீடு, கடை கட்டி, 2005ல் உதயகுமாரி(55) என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
கடந்த 2009ல் உதயகுமாரி, வாடகை வீட்டை தனசேகர் என்பவருக்கு செட்டில்மென்ட் ஆவணமாக மாற்றினார். பின்னர், 2014ல் தனசேகருக்கு கொடுத்த செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்து, தனது மகள்களான திவ்யபாரதி மற்றும் ஆராதனாவுக்கு வீட்டு உரிமையை மாற்றிக் கொடுத்துள்ளார். தற்போது இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 55 லட்சம் ரூபாயாகும்.
இதனை தட்டி கேட்ட ஹரிஹரனுக்கு உதயகுமாரி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் தனது வீட்டை மீட்க வேண்டும் என ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் ஹரிஹரன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், நில பிரச்னை தீர்வு பிரிவு ஆய்வாளர் வள்ளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில் தலைமறைவாக இருந்த உதயகுமாரியை நேற்று கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தனர்.