திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு ஆற்றங்கரை தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாத்திர வியாபாரி. இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். மூத்த மகள் முத்துலட்சுமி கடந்த ஆண்டு களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தார். தற்போது திருநெல்வேலியில் இருக்கும் தனியார் கோச்சிங் சென்டரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். முதல் பயிற்சியிலேயே நீட் தேர்வில் முத்துலட்சுமி தோல்வி அடைந்தார். வேறு பயிற்சி மையத்தில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நீட் பயிற்சி பெற்று வருகிறார்.
கடந்த சில நாட்களாக முத்துலட்சுமி பயிற்சி மையத்திற்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். பெற்றோர் கோச்சிங் சென்டருக்கு சென்று படித்து தேர்வில் தேர்ச்சி பெறுமாறு அறிவுரை கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி இன்று தனது வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவியின் தாயும் அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முத்துலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.