அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போகா ரேட்டன் பகுதியில் 23 வயது இளம் பெண் பைலட்டான ஃபெய்த் டெங்க்லி என்பவர் தனியாக விமானத்தை இயக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது புளோரிடாவின் போகா ரேட்டன் விமான நிலையத்திலிருந்து சுமார் 15 மைல் தொலைவில் பறக்கும்போது, அந்த சிறிய இரட்டை எஞ்சின் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக விமானத்தை போகா ரேட்டன் விமான நிலையத்திற்கே திருப்பி அவசரத் தரையிறக்கம் செய்ய அவர் திட்டமிட்டார். ஆனால், விமானத்தின் லேண்டிங் கியர் (Landing gear) வேலை செய்யவில்லை. அதுமட்டுமின்றி, விமானத்தில் அதிகளவு எரிபொருள் இருந்ததாலும், எஞ்சின்களில் ஒன்றும் பழுதடைந்ததாலும், விமானத்தை ஓடுதளத்தில் இறக்கினால் பெரும் தீ விபத்து அல்லது விபரீதம் ஏற்படலாம் என்று அவர் அஞ்சினார்.

இதையடுத்து, நிலத்தில் இறக்குவதை விட கடலில் இறக்குவதே பாதுகாப்பானது என்று துணிச்சலான முடிவெடுத்த அவர், கடற்கரைக்கு அருகில் மக்கள் மற்றும் கட்டிடங்கள் இல்லாத வெற்றான கடல் பகுதியைத் தேர்ந்தெடுத்தார். தனது சாதுரியத்தால் அந்த பைபர் PA-30 விமானத்தை அட்லாண்டிக் பெருங்கடலில் மிகவும் லாவகமாகவும் சுமுகமாகவும் தரையிறக்கினார்.

“>

 

விமானம் கடலில் விழுந்த சில நிமிடங்களிலேயே அங்கு விரைந்து வந்த மீட்புப் படையினரும் லைப்கார்டுகளும் அவரைப் பத்திரமாக மீட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 4 ஆண்டுகளாக விமானம் ஓட்டிவரும் இந்த இளம் பெண்ணின் துணிச்சலான செயலையும், ஆபத்தான சூழலில் அவர் எடுத்த புத்திசாலித்தனமான முடிவையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.