தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது புஷ்பா 2 பிரிமியர் நிகழ்ச்சியின் போது ரேவதி என்ற பெண் ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் பழிவாங்கல் தான் காரணம் என்று எதிர்கட்சிகள் சரமாரியாக முதல்வர் ரேவந்த் ரெட்டியை விமர்சித்து வருகிறார்கள். அதாவது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பெயர் நினைவில்லாமல் CM என்று மட்டும் குறிப்பிட்டார். இதனால் அவரை பழி வாங்குவதற்காக தான் முதல்வரின் அழுத்தத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாரத ராஷ்டிரிய சமைதி கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது தெலுங்கானா முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது நடிகர் அல்லு அர்ஜுன் கைதுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் சட்டமும் போலீசாரும் அவர்கள் கடமையை செய்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இது பற்றி கருத்து தெரிவிக்காமல் இருப்பதால் அவர் என்ன சொல்ல போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.