தொலைக்காட்சி மற்றும் திரைப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பிரபல இளம்நடிகை துனீஷா சர்மா (21) படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், காவல்துறையினர் அவரது உடலை கண்டெடுத்தனர். காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் நடிகை துனீஷாவை தற்கொலைக்கு தூண்டினார் என அவரது தாயார் அளித்த புகாரின்படி, சகநடிகரான ஷீஜன் கான் என்பவரை காவல்துறையினர் கைது செய்து கொலை மற்றும் தற்கொலை கோணங்களில் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

துனீஷா இறப்புக்கு 15 தினங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து உள்ளனர். இருவருக்கும் இடையில் நடந்தது என்ன? என்பது பற்றி அறிவதற்காக 2 பேரின் மொபைல் போன்கள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கிடையில்  துனீஷா மரண வழக்கில் கைது செய்யும் போது ஷீஜன் கான் தன் மொபைல் போனில் பல்வேறு சாட்டிங் செய்த தகவல்களை அழித்து உள்ளார் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். அவ்வாறு அழிக்கப்பட்ட பல சாட்டிங் தகவல்கள் மீண்டுமாக கிடைத்தபோது, அதில் பல பெண்களுடன் நடிகர் ஷீஜன் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனிடையில் துனீஷாவின் தாயார் வனிதா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, கொலைக்கான சந்தேகம் இருக்கிறது. மேலும் துனீஷாவை ஹிஜாப் அணியுமாறு ஷீஜன் கூறினார் என வனிதா குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் ஷீஜன் கானின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “துனீஷாவின் மாமா என கூறப்படும் பவன் சர்மா அவரது முன்னாள் மேலாளர் ஆவார். 4 வருடங்களுக்கு முன்பே அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்.

துனீஷாவின் பண விபகாரங்களை சண்டிகாரிலுள்ள அவரது மாமாவான சஞ்சீவ் கவுசல் மற்றும் தாயார் வனிதா கட்டுக்குள் வைக்கும் வழக்கம் கொண்டு உள்ளனர். துனீஷா தனக்கு தேவையான பணம் வேண்டுமென்றால் அவரது தாயார் முன் நின்று கெஞ்ச வேண்டியிருந்தது என்று தெரிவித்துள்ளார். அதே நேரம் துனீஷா, சஞ்சீக் கவுசலின் பெயரை கேட்டாலே பயப்படுவார். அவரது தூண்டுதலின்படியே, துனீஷாவின் மொபைல் போனை அவரது தாயார் உடைத்துள்ளார். துனீஷாவை அவர் கொல்லவும் முயற்சி செய்து உள்ளார் என ஷீஜன் கானின் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.