கரூரில் ரோடு போடாமல் ரூ.3.23 கோடி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் 23-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். ஆட்சி மாற்றத்திற்குப் பின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பொறுப்பேற்ற அருண் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 25-ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு உட்பட 21 இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்காக, இன்று (3-ஆம் தேதி) லஞ்ச ஒழிப்பு போலீஸ் முன்னிலையில் நேரில் ஆஜராகுமாறு எ.வ.வேலுவுக்கு முறைப்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இன்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அவரால் ஆஜராக முடியவில்லை. அங்கு அவருக்கு இஸ்கிமிக் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு அதிகரிப்பு மற்றும் தோல் சம்பந்தமான நோய்களுக்காக தீவிர இதய தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னும் 10 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், தம்மால் தற்போதைக்கு நேரில் ஆஜராக முடியாது என்பதை மருத்துவ அறிக்கையுடன் அவர் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தெரிவித்துள்ளார். ரோடு போடாமல் கோடிக் கணக்கில் முறைகேடு செய்த புகாரில் விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருந்த முன்னாள் அமைச்சர், திடீரென வெளிநாட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
