விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஒலக்கூர் அம்மணம்பாக்கம் பகுதி உள்ளது. இங்கு ராஜசேகர் அங்காளம்மாள் தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு தர்ஷினி என்ற 8-ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். இவர் ஒரு தனியார் நிகழ்ச்சியில் நடைபெற்ற பாட்டு போட்டியில் கலந்து கொண்ட நிலையில் தன்னுடைய ஊருக்கு பேருந்து சேவை இல்லாததால் தினந்தோறும் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது என்று கூறினார். அதோடு தன்னுடைய ஊருக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக அந்த ஊருக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் படி அமைச்சர் சிவசங்கர் பேருந்து சேவைக்கு ஏற்பாடு செய்த நிலையில் இன்று புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டது. அப்போது அமைச்சர் சிவசங்கர் தர்ஷினி கையால் பேருந்து சேவையை தொடங்கி வைத்த நிலையில் இனிப்பு ஊட்டி பின்னர்  அந்த ஊரில் உள்ள மாணவ மாணவிகளை பேருந்தில் ஏற்றினார். பின்னர் அவரும் பேருந்தில் ஏறி மாணவர்களுடன் பயணித்தார். அவர் மாணவ மாணவிகளை பள்ளியில் இறக்கி விட்டார். மேலும் மாணவியின் கோரிக்கைக்கு இணங்க உடனடியாக திமுக அரசு பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்ததோடு அமைச்சர் சிவசங்கர் மாணவியின் கைகளால் அதை தொடங்கி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.