உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் ஆர்த்தி தேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ராம் மிலன் சென்னையில் இருக்கும் பாபா சக்தி நிறுவனத்தில் விஞ்ஞானியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மூத்த மகள் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். ஆர்த்தி தனது மகன் அமனுடன்(17) வசித்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி அமன் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆர்த்திதேவி தனது மகனை எழுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த அமன் ஆர்த்தி தேவியை கீழே தள்ளிவிட்டு அவரது தலையில் பலமாக அடித்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த ஆர்த்தி தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை எதிர்பாராத அமன் வீட்டில் இருந்த சிசிடிவி இணைப்பை துண்டித்து கதவை வெளியே பூட்டிவிட்டு தாயின் உடலுடன் 4 நாட்களாக வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளார். ராம் தொடர்பு கொண்டபோது ஆர்த்தி தேவியின் செல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரது உடல் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இதனால் அமன் துர்நாற்றம் வெளியேறாமல் இருக்க ஊதுபத்திகளை தொடர்ந்து ஏற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் அமன் வீட்டை விட்டு வெளியேறி கோவிலுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் சென்னையிலிருந்து புறப்பட்டு ராம் வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் மனைவி சடலமாக கிடைப்பதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்த்தி தேவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அமனிடம் விசாரணை நடத்திய போது கீழே விழுந்து தாயார் இறந்து விட்டதாகவும், நான்கு நாட்கள் பயத்தில் வெளியே அலைந்ததாகவும் தெரிவித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆர்த்தி தேவியின் உடலை இழுத்து சென்றதற்கான அடையாளம் இருந்துள்ளது.

அதனை பார்த்த போலீசார் அக்கம் பக்கத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் அமனுக்கு போதை பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. பள்ளியிலும் அமன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்துள்ளது. இதனால் அமனை பிடித்து விசாரித்தனர். பள்ளிக்கு செல்லுமாறு ஆர்த்தி கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து அமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் அதிக பணம் செலவழிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அமன் தனது தாயை கீழே தள்ளி அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரைப் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தக் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.