சென்னையைச் சேர்ந்த 25 வயது இல்லத்தரசி ஒருவர், வீட்டில் தினசரி செய்யும் வேலைகளை வீடியோவாக பதிவு செய்து மணிக்கு ரூ.250 வரை சம்பாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் தனது தலையில் செல்போனை பொருத்திக்கொண்டு, வழக்கமாக செய்யும் வீட்டு வேலைகளை பதிவு செய்கிறார். இந்த வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித உருவ ரோபோக்களைப் பயிற்றுவிக்க பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, மனிதர்கள் எப்படி இயல்பாக கைகளை அசைத்து வேலை செய்கிறார்கள் என்பதை ரோபோக்கள் கற்றுக்கொள்ள இந்த தரவுகள் உதவுகின்றன. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
காய்கறிகளை நறுக்குவது, துணிகளை மடிப்பது, வீட்டை சுத்தம் செய்வது உள்ளிட்ட அன்றாட வேலைகளை செய்யும் போது ஏற்படும் கை மற்றும் உடல் அசைவுகள் வீடியோவாக பதிவு செய்யப்படுகின்றன. பின்னர் இந்த அசைவுகள் குறித்த தரவுகள் ரோபோக்களின் பயிற்சிக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. கணினி மூலம் உருவாக்கப்படும் செயற்கை சூழல்களில் கிடைக்காத நிஜ வாழ்க்கை அசைவுகளை இதுபோன்ற பதிவுகள் வழங்குகின்றன. இதனால் மனிதர்களைப் போல இயல்பாக செயல்படும் ரோபோக்களை உருவாக்குவதற்கு இந்த தரவுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.
A 25 year old housewife in Chennai earns ₹250 an hour by strapping a phone to her head and doing housework.
The videos go to AI companies training humanoid robots to move like humans. They cannot learn from simulations. They need real footage from real kitchens.
Thousands of… https://t.co/Dn5KsZyipu pic.twitter.com/SM8pnqcTir
— Vaibhav Sisinty (@VaibhavSisinty) August 13, 2026
சென்னையைப் போலவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோர் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடுகள் மட்டுமின்றி தொழிற்சாலைகள் மற்றும் சிறப்பு ஸ்டுடியோக்களிலும் மனிதர்களின் அன்றாட செயல்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன. பல்வேறு விதமான மனித அசைவுகளை சேகரிப்பதன் மூலம், எதிர்காலத்தில் வெவ்வேறு சூழல்களில் ரோபோக்கள் சிறப்பாக செயல்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மனிதர்களின் நிஜ வாழ்க்கை செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட தரவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
இந்த முயற்சி குறித்து பேசியதாக கூறப்படும் சென்னை இல்லத்தரசி, வீட்டு வேலைகளை செய்வதற்காகவே மணிக்கு ரூ.250 கிடைப்பது தனக்கு வித்தியாசமான அனுபவமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது சேகரிக்கப்படும் மனிதர்களின் அசைவுத் தரவுகள் எதிர்காலத்தில் வீட்டு வேலைகளை செய்யக்கூடிய மனித உருவ ரோபோக்களை உருவாக்க உதவலாம் என கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் துறைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியர்களின் அன்றாட வாழ்க்கை முறையும் அதற்கான பயிற்சி தரவாக மாறி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.
