தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பட்டாயாவில் உள்ள ஒரு சொகுசு பங்களாவின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போலீசாருக்கு அங்கு  கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடெங்கும் கஞ்சாவின் நெடி வீசிக் கொண்டிருக்க, பாத்ரூமில் உள்ள ஷவரில் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி கிடந்தது பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஒருவரின் சடலம் கிடந்தது. அவரது முதுகில் கத்தியால் குத்தப்பட்ட பல ஆழமான காயங்கள் இருந்தன. ஆனால், அனைவரையும் உறைந்து போகச் செய்த விஷயம் என்னவென்றால், அந்த கொடூரக் கொலைக்கு பிறகு, சடலத்தின் தலைக்கு அடியில் மிக நேர்த்தியாக ஒரு தலையணை வைக்கப்பட்டு, உடல் சாம்பல் நிற போர்வையால் போர்த்தப்பட்டிருந்தது.

இந்தியாவில் தேன்நிலவின் போது காதலனுடன் சேர்ந்து கணவனை தப்பியோடச் செய்து கொன்ற சோனம் ரகுவன்சி வழக்கை நினைவூட்டும் இந்த சம்பவத்தில், தொழிலதிபரின் 20 வயது இளம் பிரிட்டிஷ் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். தன் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடும் அந்த பெண்ணின் சதித்திட்டம் போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கஞ்சா பண்ணை நடத்தி வந்த அந்த தொழிலதிபரும் அவரது மனைவியும் வெறும் 7 நாட்களுக்கு முன்புதான் இந்த பங்களாவிற்கு குடியேறியுள்ளனர். தம்பதியிடையே அடிக்கடி பயங்கர சண்டை நடக்கும் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ள நிலையில், சம்பவத்தன்று அதிகாலை 4 மணிக்கே இக்கொலை நடந்துள்ளது. ஆனால், விடிய விடிய 5 மணி நேரம் சடலத்தின் அருகிலேயே அமர்ந்திருந்த அந்த பெண், தாய்லாந்து போலீசாருக்கோ அல்லது ஆம்புலன்ஸுக்கோ போன் செய்யாமல், இங்கிலாந்தில் இருக்கும் தனது நண்பருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் மூலமாகவே பட்டாயாவில் உள்ள மற்றொரு நண்பருக்கு விஷயம் தெரியவந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சமையலறை சிங்க்கில் ரத்தக் கறைகள் கழுவி சுத்தம் செய்யப்பட்ட 20 இன்ச் கத்தி, பெண்ணின் கைகளில் உள்ள காயங்கள் மற்றும் முதுகில் உள்ள குத்துக்காய்கள் ஆகியவை இது தற்கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் தொழிலதிபரின் உயிர் பிழைத்திருக்கலாம் என கூறும் போலீசார், சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.