
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகிறது என்று பதிவிட்டிருந்தார். அதன்படி இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்த பதிவில், இந்திய துணை கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் இரும்பின் தொன்மை என்ற நூலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். அதோடு கீழடி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றைக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அறையில் நடைபெற இருப்பதால் அனைவரும் வருக என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று நல்ல செய்தி வரும் என்று தெரிவித்திருந்த நிலையில் அது என்ன செய்தி என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தமிழர் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தை விட தொன்மையானது, பழமையானது மற்றும் அறிவார்ந்தது என்பதை தமிழக அரசு கண்டுபிடித்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தில் வெண்கல காலம் நடைபெற்ற போதே தமிழர் நாகரிகத்தில் இரும்புக்காலம் தொடங்கி விட்டதாக கார்பன் டேட்டிங் ஆய்வுமூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதைத்தான் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடப் போகிறார் என்று கூறப்படுகிறது.