தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பெஞ்சல் புயல் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் மற்றும் சேலம் உட்பட 13 மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் முன்னதாக 50 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவான நிலையில் புதுச்சேரியில் 46 சென்டிமீட்டர் அளவுக்கு மழை புயலின் போது பதிவாகி இருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் 50.30 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. உள் மாவட்டங்களில் இப்படியான மழைப்பொழிவு நிகழ்வது அரிதான விஷயம்.
இதனையடுத்து தர்மபுரியில் உள்ள அரூரில் 33 சென்டிமீட்டர் மழையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் பகுதியில் 32 சென்டிமீட்டர் மழையும், சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் 23 சென்டிமீட்டர் மழையும், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமுனாமரத்தூர் பகுதியில் 22 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் மிக அதிக அளவிலான கனமழை பெய்து வருவதால் அங்கு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அதிகளவிலான மழை பெய்து வருவதால் ஒரே நாளில் 196 ஏரிகள் நிரம்பியுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் 309 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 196 ஏரிகள் நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.