
இந்தியாவில் சாலை விபத்துகளால் வருடம் தோறும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கிறார்கள். குறிப்பாக கடந்த வருடம் மட்டும் ஹெல்மெட் போடாததால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்ததாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் விபத்துகளை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் புதுச்சேரியில் இன்று முதல் ஹெல்மெட் போடவில்லை எனில் 3 மாதங்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்ற புதிய விதியை அமலுக்கு வந்துள்ளது. இதேபோன்று தற்போது உத்திரபிரதேச மாநிலத்திலும் விபத்தை தடுக்க ஒரு புதிய விதியை அமலுக்கு கொண்டுவந்துள்ளனர்.
அதாவது இனி பைக்கில் செல்லும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிவது கட்டாயம். ஒருவேளை ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்து பெட்ரோல் போட வந்தால் அவர்களுக்கு இனி பெட்ரோல் போடக்கூடாது என மாநில முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் ஹெல்மெட் போடவில்லை எனில் கண்டிப்பாக அவர்களுக்கு பெட்ரோல் போடக்கூடாது. இதே போன்று பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் போட வேண்டும். ஒருவேளை அவர்களும் ஹெல்மெட் போடாமல் வந்தால் பெட்ரோல் போடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவின் காரணமாக இனி சாலை விபத்துக்கள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.