சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய தொழில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை தீவு திடலில் நடைபெற்ற நிலையில், கண் காட்சியின் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள திருவாரூர் தேர், மாமல்லபுரம் கடற்கரை கோவில், குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, 10,000 சதுர அடி பரப்பளவில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள டிரைவ்-இன் ரெஸ்டாரண்ட், டிரைவ்-இன் தியேட்டர் போன்றவற்றை அமைச்சர்கள் பிகே சேகர்பாபு, மா. சுப்ரமணியன், கா. ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சி 70 நாட்கள் நடைபெறும் நிலையில், கண்காட்சியில் 27 அரசு துறைகள் மற்றும் 21 பொதுத்துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் மக்கள் பெரும் பயன்கள் குறித்து தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு 60 தனியார் அரங்குகள், 125 சிறிய கடைகள், 20,000 சதுர அடி பரப்பளவில் பொழுது போக்கு பூங்கா போன்றவைகள் அமைக்கப் பட்டுள்ளதோடு 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்தியர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தினந்தோறும் நாட்டிய திருவிழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.