தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று பிரம்மாண்ட அரசு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு, மருத்துவத்துறையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 2,144 பேருக்குப் பணி நியமன ஆணைகளைத் தன் கரங்களால் வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மருத்துவப் பணியாளர்களுக்கு ஒரே மேடையில் பணி நியமன ஆணை வழங்கப்படுவது அரசு வேலைக்காகக் காத்திருந்த இளைஞர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

​இத்துடன் மக்களின் மருத்துவத் தேவைகளை மேலும் எளிமையாக்கும் வகையில், “விஜய் நலம் டிஎன்” (Vijay Nalam TN) என்ற புதிய இணையதள சேவையையும் முதலமைச்சர் இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்காகக் கட்டப்பட்டுள்ள சுமார் 139 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அதிநவீன புதிய கட்டடங்களையும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார். மருத்துவக் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் தமிழக அரசின் இந்த அடுக்கடுக்கான அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் தற்போதே காட்டுத்தீ போலப் பரவி பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.