அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள ஜோயல் ஆஸ்டின் லேக்வுட் என்ற கிறிஸ்தவ ஆலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்துள்ளது. 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் ஐந்து வயது குழந்தையுடன் சர்ச்சுக்குள் நுழைந்தார். அதோடு மற்றொரு கையில் துப்பாக்கியுடன் வந்த அவர் சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார்.

இந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீசார் அந்த பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிர் இழந்த நிலையில் அவரது கையில் இருந்த குழந்தையை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் அந்த பெண் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 57 வயது நபர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தப் பெண் யார் குழந்தைக்கும் அந்த பெண்ணிற்கும் என்ன தொடர்பு என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.